Pages

Thursday, February 09, 2012

டைரி.... பக்கம் ஒன்று

டைரி.... விருப்பமில்லாதவர்கள் தொடர வேண்டாம்.

எனக்கு சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலோ இல்லை துக்கம் தொண்டையை அடைத்தாலோ நான் சிலவற்றைத் தவறாமல் செய்வேன்.

1. தனிமையில் சில மணித் துளிகள் செலவிடுவேன். கொஞ்ச தூரம் நடந்து செல்வேன் என்னுடன் பேசிக் கொண்டே.

2. தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தாலும் என் மடிக்கணினியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பேன்.

3. கல்லூரி விடுதியில் சேர்ந்த நாள் முதல் எனக்கு பிடிக்காத ஒன்று துவைப்பது. ஆனால், என் ஆடைகளைத் துவைக்க ஆரம்பிப்பேன்.

4. ஐஸ் க்ரீம் சாப்பிடுவேன் தனியாக அமர்ந்து.

5. நிலவை ரொம்ப நேரம் வேடிக்கை பார்ப்பேன்.

6. பைக்கில் வெகு தூரம் செல்வேன்.

7. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் பதிவு எழுதுவேன்.

இந்த வாரம் முழுக்க இவை எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கின்றேன். இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியான தருணங்களில் இவற்றை செய்ய எனக்கு சந்தர்ப்பம் அமைவது இல்லை.

என் நண்பர்களிடமும் டைரியிடமுமே இவ்வாறான புலம்பல்களை புலம்புவது வழக்கம். சில வருடங்களாக டைரி எழுதுவதுமில்லை. புலம்பல்களை கேட்கும் நிலையில் நண்பர்களும் தற்போது இல்லை.

வாழ்க்கையைப் பற்றி யோசித்து யோசித்தே எப்படி வாழப் போகிறேன் என்ற பயம் நிறைய வந்துவிட்டது. என்னுடன் நன்றாக பழகிய சில நாட்களிலேயே என்னைப் பற்றி கூறிவிடுவர் என் நண்பர்கள் நான் ஒரு Sentimental Idiot என்று. அந்த குணத்தால் பல நெருங்கிய நண்பர்களை அடைந்திருக்கின்றேன். அடைந்த அதே நண்பர்களையும் இழந்திருக்கிறேன்.

என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று ஏன் சில மனிதர்களை நான் சந்திக்கிறேன். நன்றாக பழகுகிறேன். என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் ஏன் திடீரென்று அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள் என்று. இப்படி ஒவ்வொரு நபரும் என்னை விட்டுப் பிரிந்து செல்லும் போது நான் எடுக்கும் ஒரே முடிவு அடுத்து யாரிடமும் senti, emotional லா இருக்கக் கூடாதென்று. ஆனால், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை அல்லவா. மீண்டும் பழகி என்னை நானே வருத்திக் கொள்கிறேன். என்னால் பிறரை சாராமல் வாழவே முடியாதா என்ற பயம் தான் என்னை சில நாட்களாக வாட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூட இவற்றை எல்லாம் என் மனதினுள் அடைத்து வைக்க முடியவில்லையே :-(

என்னை நான் மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால் என் சுயத்தை நான் இழந்து விடுவேனோ என்று தோன்றுகிறது. அதன் பின் எனக்கென்று இருந்த எல்லா அடையாளங்களும் காணாமல் போய் விடுமே. ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கின்றது. பிறரைச் சாராமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சரி போதும் என் சோகக் கதை. சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அவற்றை படித்து முடிக்க வேண்டும்.

1. நான் எல்லாம் ஆங்கில புத்தகங்கள் படிப்பேன் என்று என் கனவிலும் நினைக்கவில்லை. ஆங்கில புத்தகங்களை படிக்காதமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, புக் ஸைஸ் பார்த்தாலே ஒரு அலர்ஜி. இரண்டு, தமிழில் படிக்கும் போது கிடைக்கும் ஒரு ஃபீல் மிஸ் ஆகும். ஆனால், இவர் எழுதிய புத்தகங்கள் அப்படி இல்லை. படம் பார்த்து மட்டும் தான் நான் அழுகிற டைப் என்று நினைத்தேன். ஆனால், இவர் புத்தகங்கள் படித்து முதல் முறை கண் கலங்கினேன். இவர் இது வரை எழுதிய நான்கு புத்தகங்களை படித்து விட்டேன். இவரது சமீபத்திய புத்தகத்தை வாங்கி இருக்கிறேன். விரைவில் படிக்க வேண்டும். நான் சொல்லும் எழுத்தாளர் Chetan Bhagat.


அவரது புத்தகங்கள்,
  • Five Point Someone (2004)
  • One Night @ the Call Center (2005),
  • The 3 Mistakes Of My Life (2008)
  • 2 States (2009).
  • Revolution 2020(2011)

2. காதல் புத்தகங்கள் மட்டும் தான் மிக விரும்பிப் படிப்பேன். தத்துவ புத்தகங்கள் படிக்கும் அளவு எனக்கு பொறுமை இல்லை. அதான், தினம் தினம் வாழ்க்கையே பல தத்துவங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றதே :-) இவர்(Ravinder Singh) எழுதிய முதல் புத்தகத்தின் தலைப்பு தான் என்னை மிகவும் கவர்ந்தது, "I TOO HAD A Love Story". நேரம் கிடைத்தால் இப்புத்தகத்தை நீங்களும் படித்துப் பாருங்கள். காதலை இவரை விட யாரும் கண்டிப்பாக அழகாகச் சொல்ல முடியாது. இவரது இரண்டாவது புத்தகம் "Can Love Happen Twice". இம்முறையும் தலைப்பு தான் என்னை வாங்கத் தூண்டியது. முதல் புத்தகத்தைப் போல இதுவும் அட்டகாசமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த இரண்டு புத்தகங்களும் எப்பொழுது விற்பனைக்கு வந்தன என்று எனக்குத் தெரியவில்லை. Odyssey, Landmark அடிக்கடி போகும் பழக்கம் இல்லாததால். சமீபத்தில் Royal Meenakshi Mall சென்றேன். பார்த்ததும் வாங்கிவிட்டேன் இரண்டையும். "Can Love Happen Twice" படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். ஒரே நாளில் படித்து அதன் சுவாரஸ்யத்தை மிஸ் பண்ண விருப்பமில்லை. அதனால் ஆமை வேகத்தில் போய்க் கொண்டிருக்கின்றேன் :-)

அடுத்த பக்கத்தில் சந்திப்போம்....

Tuesday, January 03, 2012

ஆயுள் தண்டனை

உன்னை
காதலித்தது
என் இதயம்.
என் கண்ணீருக்கு
ஏன் விதித்தாய்
ஆயுள் தண்டனை!

Thursday, December 22, 2011

ஏதாச்சும் எழுதனும்ல - 2!

நடந்தது என்ன:
ஒரு கதை எழுத வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாகவே மனதில் தோன்றிக் கொண்டே இருக்கின்றது. நேரம் இல்லை என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். உலகத்தில் இருக்கும் எல்லா நேரமும் என்னிடம் தான் இருக்கின்றது. ஆனால், அதை எல்லாம் உறங்கியே கழிக்கின்றேன். பெங்களூரில் அப்படி ஒரு குளிர். இரவு 11 மணிக்கு உறங்கச் செல்கின்றேன். காலை பத்து மணிக்குத் தான் எழுகிறேன். யாரும் கண்ணு போடாதீங்க :-) நான் எப்பொழுது ஆபீஸ் வருகிறேன், எப்பொழுது கிளம்புகிறேன் என்ற விவரங்கள் மேனேஜருக்கு தெரியாத வரை எந்தப் பிரச்சனையும் இல்லை :-)

சனி, ஞாயிறு என்றால் கிரிக்கெட் தான். இப்பொழுது ஆபீஸ் கிரிக்கெட் டீமில் வேறு இருப்பதால் ரொம்ப பிஸி. எல்லா மேட்ச்சிலும் ஓரளவு பந்து வீசியவன் கடைசியாக ஆடிய போட்டியில் 4 ஓவருக்கு 42 ரன்கள் வாரிக் கொடுத்துவிட்டேன். இதை நினைத்து நினைத்தே ஒரு வாரம் என் மேலே எனக்கு கடுப்பாக இருக்கிறது. அடுத்த போட்டியில் (இப்படி கேவலமா பந்து வீசிட்டு நீ அடுத்த போட்டியில் இருப்பன்னு கனவு வேற காண்கிறாயான்னு உங்க Mind வாய்ஸ் எனக்கு கேட்குது!!) எப்படியாது நல்லா ஆடனும். மனசுல ஏதோ ஒரு வெறி இருக்கு. Dec 31st அடுத்த மேட்ச். பார்ப்போம் கலக்கப் போறேன்னா இல்லை கிழிக்கப் போறாங்களான்னு :-)

அரையாண்டு விடுமுறை :
ஹைய்யா! எங்களுக்கும் அரையாண்டு விடுமுறை இருக்கு இப்ப. 12th வரை ஸ்கூலில் இருந்தது. காலேஜ் ல செமஸ்டர் லீவ். வேலைக்கு சேர்ந்த பின் இப்படி தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததே இல்லை. இப்பொழுது வேலை பார்க்கும் கம்பெனியில் 26 முதல் 30 வரை விடுமுறை. இரண்டு சனி ஞாயிறையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறை இருக்கிறது. ஆனால், இதில் என்ன கொடுமை என்றால் ஐந்து நாட்களை எனக்கான விடுப்பு கணக்கிலிருந்து கழித்துக் கொள்வார்களாம். இருந்தாலும் இப்படி ஒரு பெரிய பிரேக் கிடைப்பது நல்லது தானே! எப்பொழுது நாளை மாலை வரும் என்று காத்திருக்கிறேன் அரையாண்டு லீவிர்க்காக காத்திருக்கும் மழலை போல. நீ குழந்தையான்னு யாரும் கேட்கப் புடாது :-)

இந்த விடுமுறைக்கு வீட்டிற்குப் போகிறேன். செப்டம்பர் முதல் வாரம் சென்ற பின் இப்பொழுது தான் செல்கிறேன். விருந்தெல்லாம் தடல் புடலா இருக்கும்ன்னு எதிர்பார்க்கிறேன் :-) ஊரில் தினமும் நான்கு மணி நேரம் பவர் இருப்பதில்லையாம். அந்த நேரம் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் இப்பவே. Suggestions are most welcome :-)

தங்கைக்கு ஒரு டூ வீலர் வாங்கித் தரப் போகிறேன். அப்பொழுது தான் நான் ஊருக்குச் செல்கின்ற வேளையில் வண்டியை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற முடியும் :-)

மிக வருந்துவது :-(
இம்மாதம் ஐந்தாம் தேதி என் முன்னாள் அறை நண்பன் கவின் திருமணம் நடை பெற்றது. என்னால் போக முடியவில்லை ஐந்து நாட்கள் காய்ச்சலில் படுத்து விட்டதால். அவன் கல்யாணத்துக்கு போக முடியாமல் போனதிற்கு மிகவும் வருந்துகிறேன். Wish you a happy married life Kavin :-)

கடைசியாக பட்ட அவமானம் : :-)
என் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் கடந்த வாரம், மதிய உணவிற்குப் பிறகு,

'மச்சி நாம Jan 1st ஆடுற மேட்ச்ல எப்படியாது ஜெயிக்கணும்' என்றேன்.

"ஏன் டா?" என்றார்.

'புது வருஷத்தோட முதல் மேட்ச் ல'.

"ஹ்ம்ம்" - அவர்.

அதோடு நான் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் தொடர்ந்தேன், 'அடுத்த வருஷம் நாம ஒரு மேட்ச்ல கூட தோற்கக் கூடாது. அதுக்கு என்ன பண்ணலாம்?' என்றேன்.

"அதுக்கு நீ கிரிக்கெட் ஆடவே கூடாது டா" என்று அசிங்கப்படுத்திட்டார். :-(

சந்திப்போம் விரைவில் ....

Thursday, November 17, 2011

விடியல்

ஆதவன்
எழும் போது
விடியல்
இவ்வுலகிற்கு....
எனக்கு மட்டும்
என் காதல் நிலா
எழும் போது....
விடிந்த பின்னும்
இருளில்
காத்திருக்கிறேன்
என் நிலவே
உனக்காக....

Thursday, October 27, 2011

ஏதாச்சும் எழுதனும்ல!

பதிவு எழுதி ரொம்ப நாள் ஆயிடுச்சு. நானும் ஏதாச்சும் எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் வெறும் காத்து தான் வருது. சரி நம்மள பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு பார்த்தா இப்படி மொக்கையா வந்து நிக்குது. அப்ப மத்த பதிவெல்லாம் மொக்கை இல்லையான்னு யாரும் கேட்கப்புடாது :-)

பாட்டு, பைக், ஆபீஸ் :
முன்பு போல இப்பொழுது பாடல்கள் கேட்பதில் எந்த ஆர்வமும் இல்லை. முன்பெல்லாம் வேலை பார்க்கும் போதோ, பயணம் செய்யும் போதோ இல்லை வீட்டில் வெட்டியாக இருக்கும் போதோ பாடல்கள் கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்பொழுது சும்மா இருந்தாலும் பாடல்கள் கேட்கும் ஆர்வம் இல்லை. ஏன் இப்படி மாறிப் போனேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் தற்போது இரண்டு பாடல்களை மட்டும் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

1. யம்மா யம்மா காதல் பொன்னம்மா - ஏழாம் அறிவு. முன்பு உறக்கம் வரவில்லை என்றால் தென்றலே தென்றலே(காதல் தேசம்) பாட்டை கேட்டுக் கொண்டே தான் உறங்குவேன். இப்பொழுது இந்தப் பாடல் தான். Addicted to SPB sir's voice.

2. உன் பேரே தெரியாது - எங்கேயும் எப்போதும். இந்தப் பாடல் என்னைக் கவர்ந்த காரணம். எனக்கு தெரியல. இப்பொழுதெல்லாம் எனக்கே தெரியாம தான் எல்லாமே நடக்குது! இந்த வருடம் என்னை மிகவும் கவர்ந்த படம் இதுவாகத் தான் இருக்கும். படம் பார்க்கும் போதே கண்டிப்பாக இரண்டாவது முறை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுவும் சென்னையில் தான் பார்க்கணும் என்று. ஆனால், சென்னை போக வாய்ப்பு அமையவில்லை. அதனால் இதுவரை பார்கவில்லை ஒரு முறைக்கு மேல் :-(

நான் ஆபீஸ் போகும் போது மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல. Infosys இல் வேலை பார்க்கும் போது Hosur ரோட்டில் 9 கி.மீ நீண்ட flyover க்காக ரோட்டை பெயர்த்து வைத்து இருந்தனர். 2 வருடங்கள் ஆபீஸ் சென்று வருவதே செம கடியாக இருந்தது. நான் பேப்பர் போட்ட நேரமும் flyover திறந்த நேரமும் சரியாக இருந்தது. இப்பொழுது என் ஆபீஸ் வேறு இடத்தில் அமைந்துள்ளது. flyover construction, kaveri water pipeline என்று இந்த ரோட்டையும் ஒரு வருடமாக தோண்டிப் போட்டிருக்கின்றனர். மழை வந்துவிட்டால் சேறும் சகதியுமாக வண்டி ஓட்டுவதே மிக சிரமமாக இருக்கின்றது. அநேகமாக நான் இந்த ஆபீசில் பேப்பர் போட்டால் தான் இந்த flyover திறக்கப்படும் என்று நினைக்கிறேன். வேற ஆபீஸ் போய் அந்த ரோட்டையும் தோண்டிட்டா???? என்ன கொடுமை சரவணன் இது!

Infosys ல் ஆபீஸ் பஸ்ஸில் சென்று வந்தேன். ஏதாவது பாட்டு கேட்டுக் கொண்டே சென்றதால் ரொம்ப நேரம் பயணித்தது போல இருக்காது. இப்பொழுது பைக்கில் சென்று வருவதால் பாட்டு கேட்காமல் சென்று கொண்டிருந்தேன். ஆனால், சில நாட்களாக இந்த இரண்டு பாடல்களை கேட்டுக் கொண்டே பைக்கில் பயணிக்கிறேன். இந்தப் பாடல்களை கேட்காமல் இருக்க முடியவில்லை.

நான் பட்ட அவமானங்கள் : :-)
1. சில நாட்களுக்கு முன்பு நான் காய்ச்சலில் படுத்திருந்தேன். என் கல்லூரி நண்பனும், அவன் மேனேஜரும் தண்ணி அடிக்க வந்திருந்தனர். அவரை அண்ணா என்று தான் அழைப்போம் என் கல்லூரி நண்பன் அங்கே இருந்த plain cake ஐ எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். அதைப் பார்த்த அண்ணா,

அண்ணா : 'டேய் அவனே உடம்பு சரி இல்லைன்னு சாப்பிட வாங்கி வச்சு இருக்கான். அதைப் போய் நீ சாப்பிட்டுட்டு இருக்க. வை டா' என்று திட்டினார்.

நண்பன் : அண்ணா, நீங்க வேற அவன் காய்ச்சல்ல படுத்து இருக்கிறதுனால தான் சாப்பிட முடியாம மிச்சம் வச்சு இருக்கான். இல்லை எப்போவோ சாப்பிட்டு முடிச்சி இருப்பான்.

காய்ச்சலில் என்னால் பதிலுக்கு எந்த counter உம் தர முடியவில்லை.

2. கிரிக்கெட் ஆடி முடித்து விட்டு எல்லாரும் பேக்கரியில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தோம். மிகவும் களைப்பாக இருந்ததால் நான் 3 ஜூஸ் குடித்து முடித்து விட்டேன். அப்பொழுதும் தாகம் அடங்கிய பாடில்லை. நண்பன் ஒருவனிடம் இன்னொன்னு டா என்றேன். எத்தனை டா குடிப்ப, சரி என்ன ஜூஸ் வேணும் என்று கேட்டான்.

நான் பதிலுக்கு விலை ரொம்ப கம்மியா இருக்கணும், குடிக்க குடிக்க வந்துட்டே இருக்கணும், தீரவே கூடாது. அப்படி எதாச்சும் சொல்லு டா என்றேன்.

அவன் பதிலுக்கு 'அப்ப நீ வீட்டில போய் தண்ணி தான் குடிக்கணும்' என்றான்.

எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விட்டோம். படம் பார்த்து நிறைய அசிங்கப் படுத்துறாங்கப்பா!

தீபாவளி :
இந்த முறை வீட்டிற்கு போகவில்லை. பெங்களூரில் தான் இருந்தேன். இரண்டு மாதத்திற்கு முன்பு எடுத்த சட்டை ஒன்று அணியாமல் வைத்து இருந்தேன் அதை மட்டும் போட்டுக் கொண்டேன். பட்டாசு போட சுத்தமா விருப்பமில்லை. சிறுவயதில் பக்கத்து வீட்டினர் பல வகையான பட்டாசு போடும் போது நான் பெரியவனாகி இந்த மாதிரி பட்டாசு வாங்கணும் என்று நிறைய கனவு காண்பேன். இப்பொழுது வாங்க பணம் இருந்தும், மனம் இல்லை தீபாவளியைக் கொண்டாட. பேசாமல் சின்னப் பையனாவே இருந்து இருக்கலாம் என்று இப்பொழுதெல்லாம் நிறைய முறை யோசிக்கிறேன்.

சரி இதோட என் மொக்கையை நிறுத்திக்கிறேன். அப்புறம் என் blog பக்கம் வர்ற ரெண்டு மூணு பேரும் வராம போய்டுவீங்க:-)

சந்திப்போம் விரைவில் ....

Monday, September 26, 2011

வாசகி

நீ மட்டும்
என் எழுத்துக்களை

வாசிப்பது இல்லை

என்று புலம்பிக்

கொண்டிருக்கின்றேன்....

நீ மட்டுமே

என் எழுத்துக்களில்

வசிப்பதை

உணராமல்....

Tuesday, September 20, 2011

ஹைக்கூ

வெள்ளை இரவில்
கருப்பு நிலா

அவள் கண்கள்
.